சாத்தூரில்
ஆட்டுத் தொட்டி நடத்தி வரும் வேலராமமூர்த்தி, அந்த ஊரிலேயே பெரிய செல்வாக்குடன் திகழ்கிறார்.
ஆனால், ஊரை சுற்றிலும் பகை.
அதனால், அவருக்கு
பாதுகாப்பாக எப்பவும் கூடவே இருக்கிறார் சசிகுமார்.
அவரது செல்வாக்கை
பயன்படுத்தி, அவரது மச்சானான
ஓஏகே சுந்தர் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து
என லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இதை அறியும் சசிகுமார், ஓ.ஏ.கே.சுந்தரின் தொழிலுக்குள் மூக்கை
நுழைக்கிறார். இதனால், ஓஏகே
சுந்தருக்கும், சசிகுமாருக்கும்
இடையே பிரச்சினை ஏற்படுகிறது. சசிகுமாரை தீர்த்துக்கட்ட ஓ.ஏ.கே.சுந்தர் முடிவெடுக்கிறார்.
இதற்கிடையில்,
வேலராமமூர்த்தியை மர்ம
நபர்கள் யாரோ கத்தியால் குத்திவிடுகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று
வரும் அவரை யார் குத்தினார்கள் என்பதை கண்டுபிடிக்க சசிகுமார் களமிறங்குகிறார்.
இறுதியில், சசிகுமார் தனது
முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
கிடாரி
கதாபாத்திரத்திற்கு சசிகுமார் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிராமத்து கதைகளில்
நடிக்க சசிகுமாருக்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரமாகவே மாறி
நடித்திருப்பது சிறப்பு. காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.
நிகிலா விமல்
பார்க்க அழகாக இருக்கிறார். ஏற்கெனவே, ‘வெற்றிவேல்’ படத்தில்
கிராமத்து தேவதையாக வலம்வந்தவர், இந்த படத்தில்
இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமே வந்து
போவதால் இவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை.
கொம்பையா பாண்டியனாக
வரும் வேலராமமூர்த்தி படத்தின் கதையை தாங்கி நிற்கிறார். தனக்கே உரித்தான
நடிப்பில் அசத்தியிருக்கிறார். சட்டையை கழட்டி போட்டுவிட்டு வீரத்துடன் நடந்து
வரும் காட்சிகளில் பிரம்மிக்க வைக்கிறார். இவருடைய வசனங்கள் தென்மாவட்ட மண்வாசனையை
கொடுத்திருக்கிறது.
ஓ.ஏ.கே.சுந்தரும்
தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கிளியாக
நடித்திருப்பவர் பேசும் வசனங்கள் நகைச்சுவையாக ரசிக்க வைக்கிறது. சுஜா வருணிக்கு
இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரம். தனது கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக
செய்திருக்கிறார்.
மற்றபடி, அனைத்து கதாபாத்திரங்களையும் கதைக்கு
ஏற்றாற்போல் தேர்வு செய்து சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த்
முருகேசன். படம் முழுக்க வன்முறை இருந்தாலும் ஆங்காங்கே காதல் காட்சிகளையும்,
காமெடிகளையும் வைத்து
அனைத்து தரப்பினரையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். காதல் காட்சிகளை இன்னும்
கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். முதல் பாதியில் கதை எதைநோக்கி பயணிக்கிறது
என்று கணிக்க முடியவில்லை. இருப்பினும், இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றியிருக்கிறது.
எஸ்.ஆர்.கதிரின்
ஒளிப்பதிவு கிராமத்து அழகை பளிச்சிட்டு காட்டியிருக்கிறது. தர்புகா சிவாவின்
இசையில் பாடல்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார்.

Post a Comment