ஜெயம் ரவி
அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய அப்பா நரேன் வங்கியில்
மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு
சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார்.
இந்நிலையில்,
ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு
நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின்
உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை
கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.
இதற்கிடையில்,
ஜெயம் ரவிக்கும்
ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று
வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும்
வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி
பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப்
போகிறார்.
ஆஸ்பத்திரியில்
கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து
அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது
செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை
திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின்
வீட்டுக்கே வருகிறார் ஹன்சிகா.
இந்த இக்கட்டான
சூழ்நிலையில், தனது அப்பா
நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை
கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும்
வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின்
உடம்பில் புகுந்து கொள்கிறார்.
அப்போதிலிருந்து,
அரவிந்த் சாமி ஜெயம்
ரவியாகவும், ஜெயம் ரவி,
அரவிந்த் சாமியாகவும்
மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும்
அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன்
திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு
என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள்
இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.
ஜெயம் ரவிக்கு
இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய அழுத்தமான
கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில்
இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் தனக்கு ஏற்ற தீனி
கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், தனது நடிப்பை
திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது அழகான
நடிப்பால் கவர்கிறார்.
அரவிந்த்சாமி
இன்னொரு ஹீரோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவர் அறிமுகம் ஆகும்
காட்சியையே வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும்
கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அழகிகளுடன் ஆடி,
பாடும் காட்சிகளில்
கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரமும் வலுவானதுதான். அதை
புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான
நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹன்சிகா
வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில்
சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில், கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள காட்சி அனைவரையும்
கவரும். நாசர், ஆடுகளம் நரேன்,
விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக
செய்திருக்கிறார்கள். படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மற்றவர்களின்
உடம்பிற்குள் சென்று வருவதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கதாபாத்திரம் மட்டுமில்லாது,
அரவிந்த் சாமியின் கதாபாத்திரம்
போலவும் நடித்தே ஆகவேண்டும். அதை, அனைவரும்
சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர்
லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த முறை ஒரு
வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 80-களுக்கு பிறகு இப்படியொரு படம்
வெளிவந்திருக்கிறது. இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில்
இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இரு
கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி,
அதற்கேற்றவாறு பொருத்தமான
கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி
படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் முதல்
பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம்
டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில்
அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற
அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
‘ரோமியோ ஜுலியட்’
படத்தில் எல்லா
பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான், இப்படத்தில்
கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க
முடியாவிட்டாலும், பின்னணி இசையில்
வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தின் வேகத்திற்கு இவரது பின்னணி இசையும்
உதவியிருக்கிறது எனலாம். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக
அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் புகுந்து
விளையாடியிருக்கிறது.

Post a Comment