சென்ற செப்டம்பர் மாதம், மக்களுக்கு இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் வழங்கப்பட்டதிலிருந்து, மொபைல் சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. ஜனவரி வரை 6.7 கோடி பேர் இந்த சிம்மினைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையைத் தொடர்ந்து தக்க வைத்திட, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, இந்நிறுவனத்தில் ரூ. 30,000 கோடி மேலும் கூடுதலாக முதலீடு செய்திட முடிவு எடுத்துள்ளார். இதன் மூலம், இந்த சிம்மைப் பயன்படுத்துபவர்களுக்கு, இணைப்பு கிடைப்பதில் பிரச்னை வரக்கூடாதென திட்டமிடுகிறார்.
தொடக்கத்தில், பயனாளர்கள் பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார்கள். நெட்வொர்க் இணைப்பு தொடர்ந்து கிடைப்பதில் சிரமங்களை எதிர் கொண்டனர். இந்த சிம் 4ஜி அலைவரிசையில் மட்டுமே இயங்குகிறது. எனவே, 2ஜி மற்றும் 3ஜி இணைப்பெல்லாம் கிடைப்பதில்லை. தொடர்பு கிடைத்தால் நன்றாக இயங்கும். இல்லை எனில், மொத்தமாக இயங்கா நிலை ஏற்பட்டது.
திட்டமிடப்பட்டிருக்கும் கூடுதல் முதலீட்டின் மூலம் அடிப்படைக் கட்டமைப்பும், நெட்வொர்க் இணைப்பும் பலப்படுத்தப்படும். புதிய முதலீட்டினையும் சேர்த்தால், ஜியோ சிம் திட்டத்தின் மொத்த முதலீடு ரூ. 2 லட்சம் கோடியாக இருக்கும். இதற்கென, பின் நாளில் மாற்றிக் கொள்ளும் வகையில் பங்குகள் பொதுமக்களுக்கு, பங்கு முன்னுரிமை அடிப்படையில் வெளியிடப்படும்.
மார்ச் வரை இலவசம் என்பதால், பெரும்பாலானவர்கள் இந்த சிம்மினைத் தங்கள் உபரி சிம்மாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். முதன்மை சிம்மாகப் பயன்படுத்துவதில்லை. இந்தப் பழக்கத்தினை மாற்ற ரிலையன்ஸ் முயன்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக, இந்த சிம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சிம் வெளியிட்ட பின்னர், மற்ற போட்டி நிறுவனங்கள், தங்கள் மொபைல் மற்றும் டேட்டா கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளனர். ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலர் இந்த வகையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கடும் போட்டியைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. மார்ச் மாதத்திற்குப் பின், ரிலையன்ஸ் ஏற்கனவே அறிவித்தபடி செயல்படுமா அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையினை வழங்குமா எனத் தெரியவில்லை. காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment

 
Top