பொதிகைத் தொலைக்காட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “கல்லூரி காலங்கள்” என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை திரு.இறையன்பு I.A.S அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதில்.... விடுதி வாழ்க்கை வாழ்க்கை திறன்கள், பணத்தின் அருமை, நேர மேலாண்மை, சமூக நுண்ணறிவு, ஆன்மிக நுண்ணறிவு, சமூக அக்கரை, பதின்மப் பருவப் பிரச்சனைகள், நூலகப் பயன்பாடு, நல்ல பழக்கங்கள், நாட்டுப்பற்று, தாய்மொழியின் முக்கியத்துவம், வறுமை தடையல்ல, சமவயது அழுத்தம், பொறுப்பான இளைய தலைமுறை, மது போதை பொருட்கள் -மின்னணு சாதனங்கள் ஆகியவற்றிற்கு அடிமையாவைத் தவிர்த்தல் போன்ற பல தலைப்புகளில் கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கி வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் அவசியம் என்கிற நோக்கில் இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்வுகள் பற்றிய நுட்பங்களை விளக்க இருக்கிறார்.
குடிமைப்பணி, இந்தியப் பொறியியல் பணி, இந்திய வனப்பணி, இந்தியப் பொருளாதாரப்பணி, இந்தியப் புள்ளியியல் பணி, மண்ணியல் பணி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள், மத்தியத் தேர்வாணையப் போட்டித் தேர்வுகள், பணியாளர் தேர்வு ஆணையப் பணிகள், தமிழ்நாடு தேர்வாணையப் பணிகள் ஆகியவற்றைக் குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கூறப்படவுள்ளன.
டிசம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு பகுதியில் போட்டித் தேர்வுகளைப் பற்றிய தகவல்கள் அவற்றில் உள்ள வினாதாள்கள் பற்றிய விவரங்கள், பாடத்திட்டம், படிக்க வேண்டிய அணுகுமுறை, தொடர்பு நூல்கள், குறிப்புகள் தயாரிக்கும் முறை போன்றவற்றையும் விளக்கமாக பார்க்கலாம்.
நன்றி: தினத்தந்தி

Post a Comment