பாண்டிச்சேரியில்
கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு
யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை
தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு
உறுதுணையாக இருக்கிறார்.
வினோதினிக்கு ஒரு
குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள்
விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார்.
மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத்
தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர்
ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.
இந்நிலையில்,
வினோதினியின் குழந்தைக்கு
மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு
ரூ.25 லட்சம் ரூபாய்
தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு
தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால்
யோகி பாபு, ரோபோ சங்கரின்
மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.
அவரிடம் தன்னிடம்
இருக்கும் ரூ.5 லட்சத்தையும்
கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான்
விஜய், மறுநாள் யாருக்கும்
தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம்
பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க
புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக்
கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார்
எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.
இந்த விபத்தில்
விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி
வந்ததா? இவர் கொண்டு வந்த
பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
விக்ரம் பிரபு
கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க
கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக
வருகிறது. ஆனால், ரொமான்ஸ்
காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க
திணறியிருக்கிறார்.
குழந்தை
நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக
மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான
ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு
மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
படத்திற்கு
மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர்
கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க
வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம்
போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.
படத்தின்
முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக்.
முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு
பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு
முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.
இமான் இசையில்
பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட
வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.
சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.

Post a Comment