ரகுமான்
கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு
வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல்
வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை
இருப்பதாகவும், அந்த வீட்டில்
உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.
துப்பாக்கியால்
சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை
செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா?
காணாமல் போனதாக
கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே
காணாமல் போனாளா? என்பது குறித்து
விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில்
புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன்
சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய
ரகுமான், அவரை தன்னுடன்
அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை
பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.
இறுதியில்,
இந்த சம்பவங்களுக்கு
தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கதையை
இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும்
கொடுக்கமுடியுமா? என்று வியக்க
வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின்
கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும்,
பார்ப்பவர்களுக்கு எந்த
இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
அதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும்
பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால்
ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட்
செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல்
அமைந்திருப்பது சிறப்பு.
சுஜித் சாரங்கின்
ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின்
பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி
காட்டி, படம் முழுக்க
புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.
காவல்துறை
அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க
அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ்
அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த
இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு
தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
அதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய
கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை
சிறப்பாக செய்து, படத்தை தூக்கி
நிறுத்தியிருக்கிறார்கள்.

Post a Comment