மத்திய அரசு பழைய
500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று
அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் தட்டுப்பாடாக இருந்து வருகிறது.
இதனால் ஓட்டல்கள், பெரிய வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் ‘சுவைப் மெஷின்’ மூலம் ‘கிரெடிட்’, ‘டெபிட்’ கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பணப்புழக்கம்
தட்டுப்பாட்டால் விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக பெரிய வணிக நிறுவனங்கள்
கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கும்
வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றன.
மேலும் சிறிய
அளவில் காய்கறி-மளிகை கடை, பெட்டி கடை வைத்திருக்கும் வியாபாரிகள்
பார்வையும் தற்போது ‘சுவைப் மெஷின்’ பக்கம் திரும்பி
உள்ளது.
வங்கிகளில்
சுவைப் மெஷின் பெறுவதற்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. நாடு முழுவதும் சுவைப்
மெஷினுக்கு ‘திடீர்’ மவுசு
அதிகரித்துள்ளது.
வியாபாரிகள்
எளிதில் ‘சுவைப் மெஷின்’ பெறுவதற்கான
நடைமுறைகள் என்ன? என்பது குறித்து இந்தியன் வங்கி (பார்க் டவுன்
கிளை) உதவி பொதுமேலாளர் எம்.வி.ரமணா விளக்கம் அளித்துள்ளார்.
அவரிடம் நிருபர்
கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எத்தனை
வகையான ‘சுவைப் மெஷின்’கள் பயன்பாட்டில்
உள்ளன?
பதில்:- டயல் அப்
(தொலைபேசி இணைப்பு மூலம்), டெஸ்க்டாப் (ஜி.பி.ஆர்.எஸ்.), ஹாண்டு ஹெல்டு (ஜி.பி.ஆர்.எஸ்.), டிஜிட்டல்
(ஜி.பி.ஆர்.எஸ்) ஆகிய 4 வகை மாடல்களில் சுவைப் மெஷின்கள் உள்ளன.
இதில் ‘டயல் அப்’, ‘டெஸ்க்டாப்’, ‘ஹாண்டு ஹெல்டு’ ஆகிய மெஷின்களில் பண பரிமாற்றம் குறித்த ரசீது வரும். ‘டிஜிட்டல்’ மெஷினில் ரசீது வராது. அதற்கு பதிலாக பண
பரிவர்த்தனை விவரம் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். ஆக
(குறுந்தகவல்) வந்துவிடும்.
‘டெஸ்க்டாப்’, ‘டயல் அப்’ மெஷின்கள் மின்சாரம் மூலம் இயங்குகிறது. மற்றவைகள் பேட்டரி மூலம் இயங்குகிறது.
கேள்வி:-
வியாபாரிகள் ‘சுவைப் மெஷின்’ பெறுவதற்கு
விண்ணப்பிப்பது எப்படி?
பதில்:- சுவைப்
மெஷினுக்காக விண்ணப்பிக்கும் வியாபாரிக்கு, அவர் எந்த
வங்கியில் விண்ணப்பிக்கிறாரோ? அந்த வங்கியில் அவருக்கு கண்டிப்பாக கணக்கு
இருக்க வேண்டும். பின்னர் வங்கியில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தில் தொழில்
விவரம், வியாபாரியின் பெயர், புகைப்படம், வீடு-கடை முகவரி, தொலைபேசி, செல்போன் எண் மற்றும் கடந்த 3 ஆண்டுகள் கடையின் விற்பனை, லாபம் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடை சொந்தமானதா? வாடகையா? ஒத்திகையா? என்பதையும்
தெரிவிக்க வேண்டும்.
கேள்வி:- ஒரு
கடையை ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து நடத்தினால், அவர்கள் எப்படி
விண்ணப்பிப்பது? ஒரு கடைக்கு எத்தனை சுவைப் மெஷின்கள்
வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்?
பதில்:- யாராவது
ஒருவருடைய புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். ஆனால் மற்றவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். விற்பனையை
பொறுத்து எத்தனை சுவைப் மெஷின்கள் வேண்டும் என்றாலும் பெறலாம். அதே நேரம் போதிய
அளவு விற்பனை இல்லாத கடைகளில் சுவைப் மெஷின்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது.
கேள்வி:-
விண்ணப்பித்தவுடன் எத்தனை நாட்களில் ‘சுவைப் மெஷின்’ வியாபாரிகள் கையில் கிடைக்கும்?
பதில்:-
விண்ணப்பித்த படிவம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
அங்கிருந்து சுவைப் மெஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்படும்.
குறைந்தபட்சம் 20 நாட்களில் இருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் கிடைப்பதற்கான
வாய்ப்புகள் உள்ளது.
கேள்வி:- ‘சுவைப் மெஷின்’ பெறுவதற்கு கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
பதில்:- சுவை
மெஷின் பெறுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ‘சிம்கார்டு’ இணைப்புக்கு மட்டும் 400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மாத வாடகை
கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்.
கேள்வி:- ஒரு
முறை சுவைப் மெஷினில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடக்கும் பரிமாற்றத்துக்கு
வரி எவ்வளவு விதிக்கப்படும்?
பதில்:- எத்தனை
முறை பயன்படுத்தினாலும் பயன்படுத்துவோருக்கு வரி எதுவும் கிடையாது.
வியாபாரிகளுக்கு விற்பனைக்கு ஏற்ப சேவை வரி வசூலிக்கப்படும்.
கேள்வி:-
இந்தியன் வங்கி வழங்கி உள்ள சுவைப் மெஷினில் மற்ற வங்கிகளின் கிரெட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியுமா?
பதில்:- அனைத்து
வங்கி கார்டுகளையும் இந்தியன் வங்கியின் சுவைப் மெஷினில் பயன்படுத்தலாம்.
கேள்வி:- தற்போது
பெரிய வியாபாரிகள் முதல் சிறிய வியாபாரிகள் வரை சுவைப் மெஷினுக்காக விண்ணப்பித்து
வருகிறார்கள். யாருக்கு முதலில் வழங்க முன்னூரிமை அளிக்கப்படும்?
பதில்:-
அனைவருக்கும் ‘சுவைப் மெஷின்’ கிடைக்கும்.
ஆனால் விற்பனை அதிகம் நடைபெறும் கடைகளுக்கு முதலில் வழங்குவதற்கு முன்னூரிமை
அளிக்கப்படும்.
கேள்வி:- சுவைப்
மெஷின் தேவை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் வசதிக்காக இந்தியன் வங்கியில்
சுவைப் மெஷின் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா?
பதில்:- இந்தியன்
வங்கியில் சுவைப் மெஷின் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த 21-ந் தேதி முதல்
நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2017) மார்ச் 31-ந் தேதி வரை இந்த முகாம்
நடக்கிறது. முகாமில் சுவைப் மெஷினுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு மாத வாடகை கட்டணம்
உள்பட எந்த வித மறைமுக கட்டணமும் கிடையாது. 1.4.2017 அன்று புதிய வாடகை திட்டம்
குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்
கூறினார்.
முறைகேடாக
நடைபெறும் பண பதுக்கலை தடுக்கும் நடவடிக்கையாக ‘கிரெடிட்’, ‘டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து
வருகிறது. எனவே வரும் நாட்களில் சுவைப் மெஷின் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும்
எளிதாக்கப்பட்டு, எந்த வித கட்டணமும் இன்றி வழங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் மத்திய அரசு மும்முரமாக
ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment