நந்திவரம்
கிராமத்தில் பேய் இருப்பதாக அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் வீட்டை காலி
செய்துவிட்டு வெளியூர் போய்விடுகிறார்கள். இதனால், நந்திவரம்
கிராமமே வெறிச்சோடி போய் கிடக்கிறது. அந்த கிராமத்திற்கு செல்லும் யாருக்கும்
பாதுகாப்பு இல்லை என்பதால் அரசாங்கமே, தடை செய்யப்பட்ட
பகுதி என்று அறிவித்து அந்த கிராமத்திற்குள் யாரையும் செல்லவிடுவதில்லை.
இந்த
சூழ்நிலையில், சென்னையில் குறும்படம் எடுக்கும் சத்யம் ராஜேஷ், அப்பாவி பெண்களை காதல் வலைக்குள் சிக்க வைத்து அவர்களை அடைய துடிக்கும்
மனப்பான்மையுடன் இருந்து வருகிறார். அதன்படி, அப்பாவி பெண்ணான
சுஷ்மாராஜை காதலிப்பதுபோல் நடித்து அவளை அடைய துடிக்கிறார். அவரை ஜெயப்பிரகாஷ்
ரகசியமாக நோட்டமிட்டு வருகிறார்.
ஒருநாள் சுஷ்மாவை
தனது நண்பருடைய தனி பங்களாவுக்கு அழைத்து செல்கிறார் ராஜேஷ். அப்போது அந்த
பங்களாவுக்கு செல்ல ஜெயப்பிரகாஷிடம் வழி கேட்கிறார். அவரோ, நந்திவரம் பங்களாவுக்கு அவர்களுக்கு வழி சொல்லி அனுப்பி விடுகிறார். இவர்களும்
எதுவும் தெரியாமல் நந்திவரத்தில் இருக்கும் அரண்மனைக்கு செல்கிறார்கள்.
அங்கு திரிஷா
உருவில் ஒரு அமானுஷ்ய சக்தி இவர்களை பயமுறுத்துகிறது. ராஜேஷின் செல்போன்
எங்கெல்லாம் திரும்புகிறதோ, அப்போது அந்த செல்போனில் திரிஷாவின் உருவம்
வருகிறது. இதனால் மிகுந்த பயத்தில் இருக்கிறார் ராஜேஷ். ஒருகட்டத்தில்
சுஷ்மாவுக்கும் அந்த வீட்டில் திரிஷாவின் ஆவி இருப்பது தெரிய வருகிறது.
இதற்கிடையில், அந்த அரண்மனைக்குள் ராஜேஷ், சுஷ்மாவை அழைத்துவந்த விஷயம் தெரிந்த
சென்ட்ராயன் அந்த அரண்மனைக்குள் நுழைகிறான். அவனையும், ராஜேஷையும் திரிஷாவின் ஆவி சுஷ்மாவின் உடம்புக்குள் புகுந்து துவம்சம்
செய்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவிக்கும் அவர்களால் அந்த
அரண்மனையை விட்டு வெளியேறவும் முடியவில்லை.
திரிஷாவின் ஆவி
இவர்களை பயமுறுத்த காரணம் என்ன? திரிஷா எப்படி ஆவியாக மாறினார்? ஜெயப்பிரகாஷுக்கும், திரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே மீதிக்கதை.
நாயகி திரிஷா
இப்படத்தில் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவில் மிதக்கும் பெண்ணாக
வருகிறார். எப்போதும் தன்னை கதாநாயகியாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக
விதவிதமான ஆடையலங்காரம், விதவிதமாக முடியலங்காரம் என ரசிக்க வைக்கிறார்.
ஒருகட்டத்தில் ஆவியாக மாறி ஆக்ரோஷம் காட்டும் விதத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கணேஷ்
வெங்கட்ராமன் இப்படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து
அசத்தியிருக்கிறார். பார்க்கவும் மிக அழகாக இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், மகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் பொறுப்பான அப்பாவாக நடித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் இவர் படத்தில் ஆவியாக இருக்கிறாரா? உயிரோடு
இருக்கிறாரா? என்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்த
குழப்பத்தாலேயே இவருடைய கதாபாத்திரம் வலுவில்லாமல் போய்விட்டது.
சத்யம் ராஜேஷ்
பெண்களை வசியம் செய்யக்கூடிய அளவுக்கு முகம் இல்லாவிட்டாலும் தனக்கு கொடுக்கப்பட்ட
கதாபாத்திரத்திற்கு என்ன செய்யவேண்டுமோ? அதை செய்துவிட்டு
போயிருக்கிறார். சென்ட்ராயன் செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இல்லாதது
பெரிய ஏமாற்றம். சுஷ்மா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது தமிழ்
சினிமாவில் பேய் சீசன் நன்றாக போய்க் கொண்டிருப்பதால் திரிஷாவை
பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவி. ஆனால், படத்தில் நிறைய
காட்சிகள் யாரையும் பயமுறுத்தவில்லை என்பதுதான் படத்திற்கு பெரிய பின்னடைவு.
தன்னை ஏமாற்றிய
கணேஷ் வெங்கட்ராமை பழிவாங்க ஆக்ரோஷமாக திரிஷா ஆடும் காட்சிகள் எல்லாம் காமெடியாக
போய்விட்டது. ஜெயப்பிரகாஷின் கதாபாத்திரத்தை தெளிவாக சொல்ல மறந்தது என நிறைய
காட்சிகள் படத்திற்கு மைனஸ்.
ஜெகதீஷின்
ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. நிறைய காட்சிகள் இருட்டிலேயே
நடந்தாலும், அழகாக ஒளியமைப்பில் கதாபாத்திரங்களை துல்லியமாக
காட்டியிருக்கிறார். ரகு குஞ்சேவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. சாய்
கார்த்திக்கின் பின்னணி இசையும் திகில் படத்திற்குண்டான அளவுக்கு இல்லை என்பதுதான்
வருத்தம்.

Post a Comment